அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெற்றோ நிலையம்
'அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ' இரயில் நிலையம், தமிழ்நாடு, இந்தியா.அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெற்றோ நிலையம், (Arignar Anna Alandur metro station) சென்னையில் இருக்கும் ஆலந்தூரில் தரைக்கு மேலே மேல் மட்டத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் ஓர் இரயில் நிலையமாகும். சென்னையின் மெட்ரோ இரயில் பாதை மொத்தம் 45.1 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். ஒரு பாதை வண்ணாரப்பேட்டையில் இருந்து அணணாசாலை வழியாக விமான நிலையம் வரையும் மற்றொரு பாதை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணாநகர், கோயம்பேடு வழியாக பரங்கி மலை வரையும் செல்கின்றன. சென்னை மெட்ரோவின் நீல வழித்தடம் மற்றும் பச்சை வழித்தடம் ஆகியவற்றின் ஒரு பகுதி ஆலந்தூர் மெட்ரோ நிலையமாகும். மேலும் இந்நிலையம் இவ்விரண்டு வழித்தடங்களுக்கு இடையில் ஒரு பரிமாற்ற நிலையமாகவும் செயல்படுகிறது. மெட்ரோ ரயில் செல்லும் இரண்டு பாதைகளும் சந்திக்கும் முக்கிய இடமாக ஆலந்தூர் சந்திப்பு அமைகிறது. அவ்வழித்தடங்களில் ஒன்று ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம் ஆகும். மற்றொன்று சென்னை மத்திய மெட்ரோ நிலையம். சென்னை நகரின் முதலாவது பல நிலை இரயில் நிலையம் ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையமாகும். இரண்டு நடைபாதைகளில் வரும் பயணிகள் தங்கள் பயணத்தின் திசையை மாற்றிக் கொள்ளக்கூடிய ஒரே இரயில் நிலையம் ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையமாகும்.




